காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்
ஆகஸ்ட் 15, 1922
ஆகஸ்ட் 15, 1922
இப்போதைய இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் சிம்லாவில்தான் 1922 ஆகஸ்ட் 15 அன்று கல்யாணம் பிறந்தார். அவரது பிறந்த நாளை இப்போது இந்தியாவே கொண்டாடுகிறது.
கல்யாணத்தின் தந்தையின் பெயர் எஸ். வெங்கட்ராம் ஐயர். தாயாரின் பெயர் மீனாம்பாள். கல்யாணத்தின் தந்தையை டெல்லியிலும் சிம்லாவிலும் எஸ்.வி. ராம் என்றும் ராம் பாபு என்றும் அழைப்பார்கள்.
1921-இல் டெல்லியில் மதராசிப் பள்ளியினை உருவாக்கியவர்களுள் கல்யாணத்தின் தந்தையும் ஒருவர். ஆரம்பத்தில் வெறும் ஐந்து மாணவர்களைக் கொண்டே அந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. அதுவே தற்போது புதுடெல்லியில் "டெல்லி தமிழ் எஜுகேஷன் அசோசியேஷன்' என - டி.டி.இ.ஏ என - சுருக்கமாக அழைக்கப்படுகின்றது.
கல்யாணத்தின் ஆரம்பக் கல்வியானது மதராசி பள்ளியிலேயே தொடங்கியது. கல்யாணம் 1937-இல் பள்ளிப் படிப்பை சர் ஹர் கோர்ட் பட்லர் உயர்
நிலைப் பள்ளியில் முடித்தார்.
நிலைப் பள்ளியில் முடித்தார்.
பின் ஸ்ரீராம் கல்லூரியில் வணிகத்துறையில் பட்டப் படிப்பில் சேர்ந்து 1941-இல் பட்டம் பெற்றார். உடனடியாகவே இந்திய ராணுவத்தின் தலைமையகத்தில் படைப்பணி சாராத பொதுப்பிரிவில் பணிக்கு சேர்ந்தார்.
அந்தக் காலத்தில் கல்யாணத்தின் தந்தை பிரிட்டீஷ் அரசாங்கத்தின் கீழ் 1920-இல் பண்டகத்துறையில் பணியில் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது அண்டை வீட்டுக்காரர்களெல்லாம் ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, மற்ற இந்தியர்களான பஞ்சாப் மாநிலத்தவர், ஜைன மதத்தவர், குஜராத்தியர், மராட்டியர் என பல்வேறு பிரிவு மக்களாக இருந்தனர். அவர்களெல்லாருமே அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
அவரது தந்தைக்கு கல்யாணம் ஒரே ஆண் பிள்ளை. மூன்று பெண் குழந்தைகள். அவரது தந்தைக்கு 300 ரூபாய் சம்பளம் இருந்தது. அப்போது அது ஓரளவு பெரிய தொகைதான். மற்ற பெற்றோர்களைப் போன்றே கல்யாணத்தின் தந்தைக்கும் அவரது மகன் படித்துப் பெரிய அறிவாளியாக வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. அவரது வீட்டிலிருந்து கல்யாணம் படித்த பள்ளி சுமார் ஆறேழு மைல் தொலைவிலிருந்தது. முதலில் நடந்துதான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்.
தன் மகன் குதிரை சவாரி கற்றுக் கொள்ள வேண்டுமென்று அவரின் தந்தைக்கு ஆர்வமிருந்தது. அப்போது அதற்காக ஒரு குதிரையையும் ஏற்பாடு செய்திருந்தார். அந்த பயிற்சியினூடாகவே குதிரையின் மேலேறியே பள்ளிக்குச் சென்றார் கல்யாணம். குதிரைக்காரன் அருகிலேயே நடந்து வருவான். பள்ளி விட்டு வருகையில் வீட்டில் தந்தை கேரட்டோடு காத்திருப்பார். வீட்டை அடைந்ததும் கல்யாணம் தந்தையிடமிருந்து கேரட்டை வாங்கி குதிரையின் வாயில் கொடுப்பார். குதிரை கடித்துச் சாப்பிடுவதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பார்.
அப்பாவிற்கோ கல்யாணம் நல்ல சுகாதாரமான உயர்தரமான உணவை உட்கொள்ள வேண்டுமென்பதில் அதீத விருப்பம். அப்போது சிம்லாவில் "டேவிகோஸ் ரெஸ்டாரென்ட் ' என்ற ஓர் உணவகம் இருந்தது. அங்கே உயர்தரமான கேக், இனிப்பு வகைகளை விற்பனை செய்து வந்தனர். கல்யாணத்தின் தந்தை அங்கிருந்து கேக் வாங்கி பள்ளியில் மகன் சாப்பிடுவதற்காக தந்து விடுவார். கல்யாணத்திற்கோ சாலையோரக் கடைகளில் விற்கும் உணவுப் பொருட்களைத் தின்பதில்தான் ஆர்வம் இருந்தது. அவரோடு படிக்கும் மற்ற மாணவர்களுக்கோ கேக் சாப்பிடுவதில் ஆர்வம் இருந்தாலும், அவர்களின் பொருளாதார வசதிக்கு அது இடம் கொடுக்கவில்லை. அதனால் பள்ளி சென்றதுமே கல்யாணம் அவர்களுக்குக் கேக்கை கொடுத்து விடுவார். அவர்கள் கொண்டு வரும் பண்டங்களை கல்யாணம் சாப்பிடுவார். குறிப்பாக "ஆலுச்சோலே' என்ற உருளைக்கிழங்கு மற்றும் கடலைப் பருப்பாலான பண்டத்தை கொண்டு வருவார்கள். மசாலாவெல்லாம் போட்டு மிகவும் சுவையாக இருக்கும். அதை கல்யாணம் மிகுந்த விருப்பத்துடன் சுவைப்பார். "கோல் கப்பா' எனப்படும் பானி பூரி இதெல்லாம் கடையிலிருந்து வாங்கி வருவார்கள். அவற்றையும் நண்பர்களிடமிருந்து ஆர்வமுடன் வாங்கிச் சாப்பிடுவார்.
அந்தக் காலத்தில் டெல்லியில் பணியாற்றும் அரசு ஊழியர்களெல்லாமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான். ஐ.சி.எஸ் அதிகாரிகளும் தென்னிந்தியர்கள்தான். எல்லாரையும் மதராசி என்றுதான் அழைப்பார்கள். தற்போது கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் எனச் சொல்கிற நிலைமை உருவாகிவிட்டது.
டெல்லியில் அந்தக் காலத்தில் நகைச்சுவை உண்டு. அரசாங்கம் மதராசியர்களாலும் சப்ராசியர்களாலும் ஆனது என்று. சப்ராசி என்றால் பியூன் எனப்படும் கடைநிலை ஊழியர்கள்.
மதராசியர்களுக்காகத்தான் அப்போது மதராசி ஸ்கூல் ஆரம்பித்தார்கள். அன்று "மதராஸ் கிளப்' என இருந்ததை இப்போது "சவுத் இந்தியா கிளப்'என மாற்றி விட்டார்கள். அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த ராவ் பகதூர் டி. சதாசிவம் பிள்ளை என்பவரும் டெல்லியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். கல்யாணத்தின் தந்தை பணியாற்றிய "இந்தியன் ஸ்டோர்ஸ் டிபார்ட்மெண்ட்' (Indian stores department) என்ற அலுவலகத்திலேயே அவரும் துணை இயக்குநராகப் பணியாற்றினார். அவர் மிதிவண்டியில்தான் அலுவலகத்திற்குச் செல்வார். அலுவலகத்தை விட்டு வந்ததும் அவரது மிதிவண்டியை வைப்பதற்கு வீட்டின் முன் குறைந்த உயரத்தில் ஒரு மரத்தாங்கி இருந்தது. அதன் மேல் மிதிவண்டியை தூக்கி வைப்பார். அதைப் பார்ப்பதற்கு எல்லாருக்கும் மிகுந்த ஆச்சரியமாக இருக்கும்.
நன்றி
தினமணி
By கல்யாணம் | Published on : 21st May 2017
No comments:
Post a Comment