அண்ணலின் அடிச்சுவட்டில்... 4 - TN SOCIAL SCIENCE

Saturday, September 9, 2017

அண்ணலின் அடிச்சுவட்டில்... 4

q4
காந்திஜியின்   செயலர்   கல்யாணத்தின்  அனுபவங்கள்
கனாட்பிளேஸ் காவல் நிலையத்திற்கு கல்யாணம் அழைத்துச் செல்லப்பட்டார்.  இரவு முழுக்க அங்கேயே இருந்தார். இன்னும் நிறைய காங்கிரஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு அங்கேயே வைக்கப்பட்டிருந்ததால் அவரையும் அங்கு வைத்திருப்பதற்கு அவர்களுக்கு இடம் போதாமல் இருந்தது. அதனால் இரண்டாவது நாளே கல்யாணத்தை லாகூருக்கு புகைவண்டி வழியாக கொண்டு சென்றனர். 
எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் அவரை அங்கேயே சிறையில் வைத்திருந்தனர். அவ்வாறு கல்யாணம் அவரை அறியாமலேயே ஒரு சுதந்திரப் போராட்ட வீரரானார். அவரை லாகூரில் நல்லவிதமாக காவல்துறையினர் நடத்தினர். எந்தவிதத்திலும் துன்புறுத்தவில்லை. காவல் நிலையத்தில் நல்ல உணவே வழங்கினர். மாலை நேரங்களில் அங்கு கைப்பந்தும் விளையாட முடிந்தது. கல்யாணமும் சிறையில் நல்லவிதமாக நடந்து கொண்டதால் எட்டு மாதத்திலேயே விடுதலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் டெல்லி வந்தார்.
நிறைய நாள் சிறையிலிருந்ததால் அவரது வேலையும் போய் விட்டது. பின் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் குறுகிய காலமே வேலை செய்தார். அங்கு வேலை செய்த நாட்களில் மாலை நேரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக கல்யாணம் சேவையாற்றினார். 
அன்று பிரபலமாக இருந்த (இந்துஸ்தான் டைம்ஸ்) நாளிதழின் முதன்மை ஆசிரியராக தேவதாஸ் காந்தி இருந்தார். அவர் மகாத்மா காந்தியின் இளைய புதல்வராவார். அவர் ராஜாஜியின் மகள் லக்ஷ்மியை திருமணம் செய்திருந்தார். 
அப்போது அங்கே கல்யாணத்தின் அலுவலகத்தில் பணியாற்றிய மதராசி லார்டு என அழைக்கப்படும் ஒரு தென்னிந்திய அதிகாரிக்கு தேவதாஸ் காந்தியை நன்கு தெரியும். அவர் தேவதாஸ் காந்தியிடம், "எனக்குத் தெரிந்து கல்யாணம்னு ஒரு பையன் இருக்கிறான். இங்கேயே பிறந்து டில்லி சிம்லாவிலே வளர்ந்தவன். அவன் ஓர் அலுவலகத்திலே வேலை பார்த்துக்கிட்டு இருக்கிறான். அவனுக்கு அலுவலக வேலையே பிடிக்காது. பெருக்குவது, துடைப்பது... சுத்தம் செய்வது போன்ற பணிகளில்தான் அவனுக்கு அதிக ஆர்வம்'' என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆக்கபூர்வமான சமூக சேவைப் பணியில் அவன் மிகுந்த ஆர்வமுடையவனென்றும் குறிப்பிட்டிருக்கிறார். 
மிகச் சாதாரணமாக அவர் பேச்சு வாக்கில்தான் அதைக் கூறி இருக்கிறார். இப்படிச் சொன்னது 1943இல். யார் அந்த நபரென்று பார்ப்போமென்று தேவதாஸ் காந்தியும் கூற, கல்யாணம் அவரிடம் அழைத்துச் செல்லப்பட்டார். 
கல்யாணத்தை அவருக்கு அறிமுகம் செய்து வைத்த போது கல்யாணத்திற்கு அவரைப் பற்றியும் தெரியாது. அவர் காந்திஜியின் மகனென்றும்  தெரியாது. எல்லாரும் "இந்துஸ்தான் டைம்ஸ்' வாங்குவார்கள்.. காந்தியை மகாத்மா என்று செய்தித் தாள்களில் அவ்வப்போது படித்து கேள்விப்பட்டிருந்தார்... அவ்வளவே. பின்னொரு நாளில்தான் அவர் காந்தியின் மகனென்றும் அறிந்தார்.
அவர் கல்யாணத்தைப் பார்த்ததும் முதலில் குடும்ப விவரங்களை கேட்டார். 
"நீங்கள் ஓர் அலுவலகத்தில் பணி செய்கிறீர்கள் அல்லவா?'' என்று கேட்டதுடன் அந்தப் பணியைப் பற்றியும் கேட்டார். 
கல்யாணம் முதலில் தான் செய்யும் வேலைகளைப் பற்றிக் கூறினார். பின் தனக்கு எழுத்தர் பணி சார்ந்த அலுவலகப் பணிகளில் ஆர்வமேதும் இல்லை என்று கூறினார். அலுவலகச் செயலாளர் பணிகளான கடிதம் எழுதுவது, அனுப்புவது போன்ற பணிகளில் தனக்கு எந்த விருப்பமுமில்லையென்றும் உறுதியாகக் கூறினார். தனது விருப்பமானது ஆக்கப்பூர்வமான உடல் உழைப்பு சார்ந்த பணிகளைச் செய்வதேயாகும் என்றார். அவையே தான் தனது ஆங்கிலேய அதிகாரியிடமிருந்து கற்றுக் கொண்டவை என்றும் கூறினார். 
உடனே அவர் "அப்படியென்றால் நீங்கள் ஏன் ஓர் ஆஸ்ரமத்தில் பணிக்குச் சேரக் கூடாது. அங்குதான் மக்கள் இந்த மாதிரி வேலைகள் செய்வார்கள். அங்கு உதவிக்கு வேலைக்காரர்கள் கிடையாது'' என்றார்.
அப்போது ஆஸ்ரமமென்றால் என்ன என்றும் அவர் எதை ஆஸ்ரமமென்று குறிப்பிடுகிறார் என்றும் கல்யாணத்திற்கு புரியவில்லை. கல்யாணம் அதைப்பற்றி அவரிடம் எதுவும் கேட்கவில்லை. வெளியே வந்ததும் தன்னை தேவதாஸ் காந்தியிடம் அறிமுகம் செய்த நண்பரிடம் ஆஸ்ரமத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். 
அவர் ஆஸ்ரமமென்பது சமூக வாழ்க்கைக்குரிய ஓரிடமென்றும், அங்கு உங்களுக்கு ஆர்வமுடைய எந்த வேலையும் செய்யலாமென்றும், நீங்கள் சமையல் செய்ய தேர்ந்தவரென்றால் உங்களுக்கு சமையல் பொறுப்பு தரப்படுமென்றும், உங்களுக்கு தோட்ட வேலையில் நல்ல திறனிருந்தால் நீங்கள் தோட்டப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார்... சில வேளாண் பணிகளைச் செய்யலாம். பசுக்களைப் பராமரித்து அவற்றிற்கு உணவளித்து பால் கறக்கலாம். ஆஸ்ரமத்தில் அவரவர் வேலைகளை அவரவர் செய்து கொள்வார்கள் என்று விளக்கினர். 
அதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியுடன், "இதற்காகவே காத்திருந்தேன். இந்தப் பணிகளே எனக்குப் பொருத்தமானவை'' என்றார் கல்யாணம். 
உடனடியாக தன்னுடைய உயர் அதிகாரியான ஆங்கிலேயரிடம் சென்று தேவதாஸ் காந்தியை சந்தித்த விவரத்தைக் கூறினார் கல்யாணம். அவர் தன்னை சேவாகிராமம் ஆஸ்ரமத்தில் சேர்ந்து விடச் சொன்னதையும் கூறி அவரது ஆலோசனையையும் கேட்டார் கல்யாணம். ஆங்கிலேயர்களுக்கு காந்தி கூறுவதெல்லாம் மிகவும் பிடிக்கும். ஒரு தடவை கல்யாணம் அவரது ஆங்கிலேய அதிகாரியிடமே, "காந்தியடிகள் எதற்கு அடிக்கடி சுதந்திரம் வேண்டுமென்று சொல்கிறார்? எல்லாம் இங்கு நன்றாகத்தானே இருக்கிறது. யார் ஆண்டால் என்ன?'' என்று கூறினார். 
அதற்கு அந்த ஆங்கிலேயரோ "அப்படியில்லை.. இது உங்க ஊரு.. நாங்களெல்லாம் வெளி ஆட்கள். உங்களை நீங்கதான் ஆளணும்.. அதுதான் உங்களுக்கு நல்லது. அதற்கு உங்களுக்கு சுதந்திரம் வேண்டும்'' என்றார்.
அப்போதே கல்யாணம் அவரிடம் "நான் சேவாகிராமம் ஆஸ்ரமத்தில் சேரப் போகிறேன்'' என்றதும், "ஓ நல்லது. சேர்ந்துவிடு...'' என்றார். அப்போது கல்யாணத்திற்கு அந்த அலுவலகத்தில் மாதம் 200 ரூபாய் சம்பளம் கிடைத்துக் கொண்டிருந்தது. ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். 
 "ஆஸ்ரமத்தில் சம்பளம் எதுவும் கிடையாது'' என்று அதிகாரியிடம் சொன்னார் கல்யாணம். 
உடனடியாக அவர், "இரண்டு மாதத்தை விடுப்பாக எடுத்துக் கொண்டு செல். பிடித்தால் அங்கே இரு. பிடிக்கவில்லையென்றால் திரும்பி இங்கே வந்து விட வேண்டியதுதானே'' என்றார். 
இறுதியில் கல்யாணம் சேவாகிராமிற்கு செல்லலாமெனத் தீர்மானித்தார்.
Thanks to Dinamani.
By கல்யாணம்  |   Published on : 04th June 2017  

No comments:

Post a Comment